Tuesday, 13 September 2016

பொன்னியின் செல்வன் எனது பார்வையில்

      பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் சோழர்களின் வரலாற்று பின்னணியை அறிந்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்தக் கதையைக் கற்பனைக் கலந்து படைத்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரங்கள் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவர்கள். கதையை மேலோட்டமாகப் பார்த்தால் அரசியல் சூழ்ச்சி, குழப்பம் போல் தோன்றும் உண்மையில் குந்தவைப் பிராட்டிக்கும், நந்தினி தேவிக்கும் இடையே ஆன போட்டியே இக்கதை.
      சோழப் பேரரசர் கண்டராதித்தருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவர் தன் தம்பி அரிஞ்சயனுக்குப் பட்டம் சூட்டுகிறார். அரிஞ்சயனும் ஒரு வருடத்தில் இறக்கவே அவரது மகன் சுந்தரச்சோழர் அரச பதவியை ஏற்கிறார். வயதான காலத்தில் கண்டாதித்தர் செம்பியன் மாதேவியை மணக்க மதுராந்தகர் பிறக்கிறார். இருப்பினும் தனது தம்பியின் வாரிசுகளே நாட்டின் வாரிசுகள் என்றும். தனது மகனை இறைப்பணியில் ஈடுபடுத்துமாறுக் கூறி இறக்கிறார். சுந்தர சோழரின் மகள் குந்தவை பழையாறையில் வசிக்கிறாள். சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் இளவரசு பட்டம் பெற்று பாண்டியனை வென்றுக் காஞ்சியில் பொன்மாளிகையைக் கட்டுகிறார். இளைய மகன் அருள்மொழிவர்மன் இலங்கையில் மகிந்தனை வெல்ல படையுடன் சென்று இருக்கிறான்இவர்களின் செயல்கள் பிடிக்காமல் சோழ நாட்டின் தளபதியும், தன அதிகாரியுமான பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்கள் அரசர் சுந்தரசோழரை தனிமைபடுத்துகிறார்கள். இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கிறது.
 
       ஆதித்தகாரிகாலனின் ஓலையைச் சுமந்துக்கொண்டு தஞ்சையை நோக்கி பயணிக்கிறான் வந்தியதேவன். வழியில் ஆழ்வார்க்கடியான் என்பவரைச் சந்திக்கிறான். அவன் தங்கைதான் பெரிய பழுவேட்டரையர் வயதான காலத்தில் மணந்திருக்கும் நந்தினிதேவி என்கிறார். பின்னர் அவன் நண்பன் கந்தமாறனின் கடம்பூர் மாளிகையில் தங்க நேரிடுகிறது. அன்று இரவு சோழமண்டலத்தின் பதிமூன்று வேளிர்களும் பெரிய பழுவேட்டரையரும் சேர்ந்து அடுத்த அரசரைத் தேர்ந்தெடுக்க ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். இதனை அறிந்த வந்தியதேவன் எதுவும் தெரியாதவன் போல் தஞ்சையை நோக்கிப் பயணிக்கிறான். தஞ்சை சொல்லும் வழியில் நந்தினி தேவியைச் சந்தித்து நயச்சியமாகப் பேசி முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான்.(உண்மையில் நந்தினி வேண்டும் என்று தான் மோதிரத்தைக் கொடுக்கிறாள்). பெரிய பழுவேட்டரையரின் இலச்சினை என்பதால் எளிதில் மன்னைரைக் கண்டு ஆதித்தனின் ஒலையைக் கொடுக்கிறான். இதனால் சந்தேகம் அடைந்த சிறிய பழுவேட்டரையர் வந்தியதேவனை சிறைப்படுத்த மீண்டும் நந்தினியின் உதவியால் கோட்டையை விட்டு வெளியேறுகிறான். கோட்டைக்கு வெளியே சேந்தன் அமுதனின்(இவனே உண்மையான மதுராந்தகச் சோழன், அப்படி எனில் அரண்மனையில் இருப்பது யார்?) உதவியுடன் பழையாறைச் சென்று குந்தவை பிராட்டியைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கிறார். அவளும் ஓலையைப் பெற்றுக்கொண்டு, வந்திய தேவனை இலங்கையில் இருக்கும் இளைய தம்பி அருள்மொழி வர்மனை அழைத்துவரும் பணியைக் கொடுக்கிறாள். இதற்கு இடையில் காஞ்சியில் ஆதித்தன் தன் நண்பனிடன் தனது கடந்த காலத்தைக் கூறுகிறான். அதில் தனது சிறிய வயது காதலிதான் நந்தினி, தமக்கையின் அலட்சியத்தால் நந்தினி மிகவும் துன்பம் அடைந்தாள், பின்னர் அவளைப் போர் நிமித்தம் பிரிய நேர்ந்தது. பின்னர் ஆறு வருடம் கழித்து நந்தினியை, போரில் காயம் அடைந்த பாண்டியனைத் துரத்தும் போது சந்தித்தேன், அவள் அவனை விட்டுவிடுமாறு வேண்டினாள், மேலும் பாண்டியன் தன்னை மணந்து பட்டத்து ராணியாக்குவதாக வாக்கு தந்துள்ளான் என்றும் மன்றாடினாள். தனது காதலியை மணக்க கேட்டவன் என்ற காரணத்தால் ஆத்திரத்தில் பாண்டியன் தலையை துண்டித்துவிட்டேன் என்கிறான் ஆதித்தன். அக்கணத்தில் நந்தினியின் வதனத்தில் தோன்றிய வெறுப்பு, குரோதம் இதனை வார்த்தையில் வர்ணிக்க முடியாது என்கிறான். மேலும் தற்பொழுது தனதுப் பெரிய பாட்டனை மணந்துள்ளாள், அதனால் தான் தஞ்சைச் செல்ல பயப்படுவதாகக் கூறுகிறான். அதனால் தனது தம்பியை அழைத்து வர பார்பேந்திரனை இலங்கைக்கு அனுப்புகிறான் ஆதித்தன்.
      மீண்டும் சேந்தன் அமுதனின் உதவியால் அவனின் முறைப்பெண் பூங்குழலியுடன் இலங்கைச் செல்கிறான் வந்தியதேவன். பார்பேந்திரன் அவனுக்கு தெரியாமல் பாண்டிய விசுவாசிகளுக்கு உதவி செய்து அருள்மொழி வர்மனின் உயிருக்கு ஆபத்து நேரிடும் வேலையைச் செய்கிறான். அந்த நேரத்தில் நந்தினி பாண்டியர்களின் ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சதி வேலையில் ஈடுபடுகிறாள். சோழர்களின் பொக்கிஷத்தை(தங்கம்) பாண்டியர்களுக்குத் தாரை வார்க்கிறாள், பெரிய பழுவேட்டரையர் அறியாமல், மேலும் ஆதித்தனை கடம்பூர் மாளிகையில் சந்திக்க கந்தமாறனிடன் ஓலை கொடுத்து அனுப்புகிறாள. இலங்கையில் அருள்மொழி வர்மனுக்கு ஏற்படும் ஆபத்துகளில் எல்லாம் நந்தினி போல் இருக்கும் மந்தாகினி அம்மாள்(இவர் நந்தினியின் தாயார் மேலும் சுந்தர சோழனின் முன்னாள் காதலி, சூழ்நிலையால் பிரிந்தவள்) காப்பாற்றுகிறாள். பல சாகசங்களுக்குப் பிறகு இலங்கையில் இருந்து திரும்பும் அருள்மொழி வர்மனுக்குப் பாண்டிய விசுவாசிகளால் ஆபத்து ஏற்பட்டு கப்பல் தீ பிடிக்கிறது. அதிலிருந்து தப்பிய அருள்மொழி வர்மன் நாகப்பட்டிணம் புத்தவிகாரத்தில் அடைக்கலம் அடைகிறான். அருள்மொழி வர்மன் இறந்துவிட்டான் என்ற செய்தி சோழ நாட்டில் பரவுகிறது. இதற்குக் காரணம் குந்தவை என்று குற்றம் சாட்டுகிறார் அமைச்சர். ஆனால் உயிருடன் இருக்கிறான் என்ற செய்தியை வந்தியதேவன் குந்தவையிடம் உரைக்கிறான். ந்தியதேவனுக்கு உதவியதற்காக சேந்தன் அமுதன் சிறையில் அடைக்கப்படுகிறான். அவனிடம் ஒருவன் சோழ ராஜ்ஜியத்தையே புரட்டிபோடும் ரகசியம் இருப்பதாகக் கூறுகிறான். ஆனால் அதனை கேட்க மறுக்கிறான் அமுதன். சேந்தன் அமுதனைச் சந்திக்க குந்தவைச் செல்கிறாள். அப்போதுதான் சோழ நாட்டையே உலுக்கும் செய்தியை அறிகின்றாள். அதாவது உண்மையான மதுராந்தகன் யார் என்று.
       ஓரே நேரத்தில் சோழ அரசர்கள் மூவரையும் கொல்லும் சதிவேலையில் ஈடுபடுகிறாள் நந்தினி. கடம்பூர் மாளிகையில் ஆதித்தனையும், சுந்தர சோழரை அரண்மனையிலும், அருள்மொழி வர்மனைப் பட்டத்து யானையாலும் என்று திட்டமிடுகின்றனர். ஆனால் குந்தவை தனது தம்பி ஆதித்தன் கடம்பூர் வருவதைத் தடுக்க வந்தியதேவனை அனுப்புகிறாள். இதற்கு இடையில் நாகப்பட்டிணத்தை வெள்ளம் சூழ்ந்ததால் தன்னை வெளிப்படுத்தும் நிலை அருள்மொழி வர்மனுக்கு ஏற்படுகிறது. அவன் பழையாறை வரும் வழியில் கொல்ல சதி மேற்கொள்கிறார்கள் பாண்டியனின் ஆபத்துதவிகள். காஞ்சியில் வந்தியதேவனால் ஆதித்தனை தடுக்க முடியவில்லை. அதனால் ஆதித்தனுடன் கடம்பூர் செல்கிறான் வந்தியதேவன். கடம்பூர் மாளிகையில் நந்தினையைச் சந்திக்கும் அறையில் ரகசிய அறைகள் இருக்கிறது. அதில் யாருக்கும் தெரியாமல் வந்தியதேவன் வேவு பார்க்க இருப்பினும் விபரீதத்தைத் தடுக்க முடியவில்லை. ஆதித்தன் இறக்கிறான், அதே நேரத்தில் யானையை மதம் பிடிக்க வைத்துக் கொல்லும் சதியில் இருந்து மீள்கிறான் அருள்மொழிவர்மன்.   சுந்தரசோழனை விஷ ஈட்டி எறிந்துக் கொள்ளும் வேளையில் அதனைத் தாங்கி உயிர் துறக்கிறாள் மந்தாகினி. மதுராந்தக சோழனாக இருப்பவன் வீரபாண்டியனின் வாரிசு என்று அறிந்து அவனை கைது செய்கையில் தப்பித்துவிடுகிறான். உண்மையான உத்தம சோழன் சேந்தன் அமுதன் பதவி ஏற்கிறான். அருள்மொழிவர்மன் தன் அரச பதவியை சிற்றப்பாவிற்கு விட்டுதந்துவிட்டு இலங்கைக்குப் படையெடுத்துச் செல்கிறான். ஆதித்தனைக் கொன்ற பழி வந்தியதேவன் மீது விழுகிறது. இந்தப் பழியில் இருந்து வந்தியதேவனை, பெரிய பழுவேட்டரையர் காப்பாற்றி இறக்கிறார். குந்தவை வந்தியதேவனை மணக்கிறாள். நந்தினி தன்னைப் பற்றிய ரகசியத்தை அருள்மொழிவர்மனிடன் கூறி இறக்கிறாள்.

பின்குறிப்பு;

     கடைசி வரை நந்தினி பற்றிய ரகசியத்தைக் கூறாமல் விட்டு இருப்பார் கல்கி. நந்தினி உண்மையில் பாண்டியனின் மகள். அவள் சுந்தரசோழனின் மகளா இருப்பளோ என்ற சந்தேகத்தில் குந்தவை ஆதித்தனுடன் நந்தினி பழகுவதைத் தடுக்கவே நந்தினியை வெறுப்பாள். சுந்தரசோழன் காதலித்த பெண் மந்தாகினி என்பதற்காகவே பாண்டியன் அவளை கந்தர்வ மணம் புரிகிறான். ஆனால் அவள் சுந்தரசோழனை மறக்காமல் தான் பெற்ற இரட்டை குழந்தையை (நந்தினி, மதுராந்தகன்) செம்பியன் மாதேவியிடம் கொடுக்கிறார். செம்பியன் மாதேவி தன் மகன் இறந்துவிட்டதாக எண்ணி வாணியிடம் புதைக்கக் கொடுக்கிறார். அந்த குழந்தையே சேந்தன் அமுதன். குழந்தை இறந்தாக எண்ணி மதுராந்தகனைத் தன் மகனாக வளர்க்கிறார் செம்பியன் தேவி. பாண்டியனைத் தன் தந்தை என்றுதான் கூறுவாள் நந்தினி காதலுடன் ஆத்திரம் கொண்ட ஆதித்தன் கவனிக்காமல் கொன்றுவிடுவான். ஆதனால்தான் நந்தினி காதலித்தவன் தன் தந்தையை கொன்றதைத் தாங்காமல் சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பழிவாங்க நினைப்பாள். தன்னை கொல்ல விரும்புகிறாள் என்று தெரிந்தே கடம்பூர் செல்வான் ஆதித்தன். (ஆதித்தன் ஈடு இணையற்ற வீரன்) அவனின் காதலை மிக அழகாக கூறியிருப்பார் கல்கி. காதலிக்காக அவள் விரித்த வலையில் விழுந்து பாண்டியர்களால் கொல்லப்படுவான் ஆதித்தன். இந்த ரகசியங்களைச் சொல்லாமல் படிப்பவர் யூகத்திற்கே விட்டு இருக்கும் கல்கியின் எழுத்து வன்மை அருமை. ஆரம்பத்தில் வில்லியாக இருந்த நந்தினி கடைசியில் பாவப்பட்ட பெண்ணாக அனைவரின் அனுதாபத்தையும் பெற்று விடுகிறாள்
                             ஓர் வெள்ளி
                                                     - செல்வி அனு
      

      தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த மோட்டார் வாகன ஓட்டியைப் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன். நான் நின்ற பேருந்து நிறுத்ததில் ஐந்தாறு பேர் இருந்தார்கள். சூடு அதிகமாக இருந்ததால் யாரும் உட்காரும் எண்ணத்தில் இல்லை. நானும் என் மகளுடன் பேருந்து வருகைக்காக காத்திருந்தேன். அப்போது எனது மகள், 
'அம்மா வென்டிங் மெசினில் ஏதாவது வாங்க ஒரு வெள்ளி தாருங்கள்' என்றாள்.
கைப்பையில் இருந்து சில்லரைக்காசுகளை எடுத்தேன். மகளிடம் ஒரு வெள்ளியைக் கொடுத்துவிட்டு மீதம் உள்ள சில்லரையைப் பையில் வைக்கும் போது ஒரு வெள்ளி தவறி ஒடியது, நான் பதறி ஒடித் தடுத்தேன். பின்னர் குனிந்து எடுத்தவுடன் தான் கவனித்தேன். பேருந்து நிறுத்ததில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக்கொண்டு இருப்பதை, எனக்குச் சங்கடமாக இருந்தாலும் யாரையும் பார்க்காமல் காசை எடுத்து என் பையில் வைத்தேன். இவர்கள் யாருக்காவது தெரியுமா? இந்த ஓரு வெள்ளி எனக்கு ஒரு நாள் எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று, மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்தது என்று, சொல்கிறேன், இந்த நிகழ்வு பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தது.
      நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்த பெண். பெண் படிப்பது எல்லாம் குடும்ப நடத்துவதற்கு தான் வேலைக்கு போக அல்ல என்ற சிந்தனைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். ஏராளமான கட்டுபாடுகளுடன் தான் என் பட்டப்படிப்பை முடித்தேன். பட்டப்படிப்பு முடித்து இரண்டு வருடத்தில் திருமணம். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவரை, இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான் திருமணம் செய்துகொண்டேன். வீட்டாரின் அனுமதியுடன்தான். ஆரம்ப காலத்தில் எங்கள் வாழ்க்கையும் எல்லா புதுமணத் தம்பதிகள் போல் இனிமையாகவே இருந்தது. திருமணத்திற்காக எடுத்த விடுமுறையை சரி செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருந்ததால் சிங்கப்பூர் வந்தவுடன் வேலையின் பின்னே ஓடத் தொடங்கினார் என் கணவர். பின்னர் என்ன? காலையில் இருந்து இரவு அவர் வரும்வரை சன் டிவியும், வசந்தம் தொலைக்காட்சியும் தான் என் பேச்சுத் துணை. வெளியே சென்று யாரிடமும் பேச பயம் எனக்கு, ஏனெனில் மொழி பிரச்சனை அப்போது பெரும் பிரச்சனையாகத் தெரிந்தது. நான் பேசும் ஆங்கிலம் இங்கு யாருக்கும் புரியவில்லை, அவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கும் புரியவில்லை. படித்திருந்தாலும் பேசினால் யாராவது தவறாக நினைப்பார்களோ என்ற பயத்திலேயே பேசுவதைத் தவிர்த்துவிடுவேன்.
          இரவு தான் என்னவர் வீடு திரும்புவார், அதுவரை பேச ஆள் இல்லாமல் இருக்கும் நான், அவர் வந்தவுடன் சேர்ந்து வைத்து நான் மட்டுமே பேசுவேன். அவர் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. பாவம்தான் அவரும், இப்பொழுது புரிகிறது, அப்போது புரியவில்லை.
 'கொஞ்ச நேரம் என்னைத் தனியாக விடு' என்று சில சமயங்களில் சொல்லிவிடுவார். அப்போது நான் மிகவும் காயப்படுவேன். நான் ரொம்ப தொந்தரவுத் தருவதாக நினைத்து வருந்துவேன். முடிந்தவரை என் கணவர் என்னை வெளியே அழைத்துச் செல்வார் காடியில் தான், இரவு ஏதாவது டின்னர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு விருந்துக்கு என்று, நான் வெளி உலகத்தைப் பார்ப்பது காடி கண்ணாடி வழியாகத் தான், மற்றபடி வேறு ஒரு இடமும் தெரியாது. அவரின் நண்பர்கள் வீட்டு விருந்திலும் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். நான் பார்த்துக்கொண்டு தான் இருப்பேன். அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாராவது என்னிடம் பேசினால் மட்டுமே உண்டு. அந்த மாதிரி சமயங்களில் நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன். இப்படி நாளாடைவில் நான் பேசுவதே குறைந்துவிட்டது. நான் சிங்கை வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. அந்நிலையில்
 'விசா நீடிக்க வேண்டும், நாளை காலை 8 மணிக்கு ரெடியாக இரு, எனக்குப் பதினொரு மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு' என்று என்னவர் கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டு படுத்துவிட்டேன். அன்று என்னவோ ஐசிஐயில் நிறையக் கூட்டம். 'இன்று ரொம்ப நேரம் ஆகும் போல இருக்கு, முடிந்தவரை உன்னை வீட்டில் விடப் பார்க்கிறேன் இல்லை எனில் பேரூந்தில் வீட்டிற்குச் சென்றுவிடு' என்று கூறிவிட்டு கைத்தொலைப்பேசியில் கவனத்தை வைத்தார் என் கணவர். இதைக் கேட்டவுடன் எனக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. ஏன் என்றால் நான் பேருந்தைப் பார்த்து மட்டுமே இருக்கிறேன் இதுவரை ஏறியது இல்லை. என்னை அறியாமல் சரி என்று கூறிவிட்டேன். எல்லா வேலையும் முடிந்து வெளியே வர காலை பத்து முப்பது மணியாகி விட்டது. 'சரி நீ 24 எண் உள்ள பேருந்து எடுத்து பெண்டமியர் பள்ளி பஸ் ஸடாப்பில் இறங்கி வீட்டிற்கு சென்றுவிடு' என்று கூறி என்னை லாவண்டர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார் என் கணவர். நான் காடியில் இருந்து இறங்கிவிட்டு, தயங்கி, 'என்னிடம் பேருந்து அட்டை இல்லை' என்றேன். பேருந்துல் செல்ல பயண அட்டை வேண்டும் என்ற விவரம் எனக்குத் தெரியும். காடியை எடுத்தவர், நிறுத்தி 'இல்லை என்றால் என்ன? ஒரு வெள்ளி போட்டு போய்விடு' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். நானும் முதன் முதலில் பேருந்து ஏறும் ஆவலுடன், சற்று படபடப்பை உணர்ந்தேன்.  பேருந்து நிறுத்தத்தில் நிறைய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். எனக்கு என்னவோ புதியதாக பள்ளிக்குச் செல்லும் மாணவியின் மனநிலையில் இருந்தேன். சரி கைப்பையில் இருந்து காசை எடுப்போம் என்று கைப்பையில் கையைவிட்டேன். கைப்பையில் என்னுடைய வாலட் மற்றும் போனைக் காணவில்லை. ஆ! என்று என்னை அறியாமல் சொல்லிவிட்டேன். ஆம், என்னிடம் கையில் வாலட் இல்லை, அதாவது காசு இல்லை, போனும் இல்லை. சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. மூளை காலியாகிவிட்டது போல் இருந்தது. என்னால் யோசிக்க முடியவில்லை. சிறிது நேரம் பிடித்தது என்னுடைய நிலையை நான் புரிந்து கொள்ள, இப்போது என்ன செய்வது, என்னிடம் வீட்டிற்கு செல்ல காசு இல்லை, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றாலும் கையில் கைத்தொலைபேசி இல்லை. சரி பொது தொலைப்பேசியில் பேச வேண்டும் என்றால் 10 காசு வேண்டும். என்ன செய்வது. சிறிது நேரத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை, அப்போது இருந்த என் நிலையை உணர்த்தியது என் அறிவு. என்னை அறியாமல் கலங்கிவிட்டேன். சற்று நேரம் உட்காருவோம் என்று பேருந்து நிலைய இருக்கையில் உட்கார்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்வது. யோசிப்போம்.
       எங்கு விட்டேன் என் வாலட்டையும் கைத்தொலைபேசியையும்? ஆ ஞாபகம் வந்துவிட்டது. நேற்று இரவில் இருந்து என் போனையும் வாலட்டையும் பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்பதைக் காட்டிலும் கவனிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நேற்று என் நாத்தனார் எங்களை இரவு சாப்பிட அழைத்து இருந்தார். அங்கு தான் விட்டு இருக்கவேண்டும். ஏனெனில் அவர் சில பொருட்களைத் தந்தார், அவற்றை எடுத்துக்கொண்டு, இவைகளை விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். காலையில் கிளம்பும் அவசரத்தில் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது என்ன செய்வது? என் நிலைமை என்னை மருட்டியது,
          பேருந்து நிலையம் வந்து ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. இப்போது மணி மதியம் 12 ஆகிவிட்டது. எந்நிலைமை யாருக்குமே தெரியாது? என்னை இங்கு என் கணவனைத் தவிர யாரும் தேடவும் மாட்டார்கள், அவரோ வேலையில் இருக்கிறார். அவர் வேலை நேரத்தில் போன் பேசுவதே இல்லை. நான் தான் பேசுவேன். இப்போது என்ன செய்வது, சரி ஏதாவது காசு நமக்குத் தெரியாமல் கைப்பையில் இருக்கலாம் என்ற நப்பாசையில் பையில் கைவிட்டுத் துழாவினேன். 'நன்றி கடவுளே, என் கையில் வட்டமாக ஏதோ ஒன்று தட்டுபட்டது, கட்டயாம் காசு தான்'. அப்பாடி நம் நிலைமை மோசமாகவில்லை என்று பதற்றத்துடன் வேகமாக எடுத்தேன். பதற்றமும் ஆர்வமும் சேர்ந்து, கையில் தட்டுப்பட்ட ஒரு வெள்ளி நாணயம் தவறிக் கீழே உருண்டு ஓடியது. பதற்றத்தில் அதனை தடுக்க குனிந்தேன் அதற்குள் அந்த நாணயம் உருண்டு பக்கத்தில் இருந்த அல்லூரில் விழுந்துவிட்டது. 'ஐயோ, கைக்கு கிடைத்தது வாய்க்கு வாய்க்கவில்லையே, கையில் கிடைத்த சொர்க்கத்தை தவறவிட்டது போல் இருந்தேன். காலையில் இருந்து சோதனைக்கு மேல் சோதனை என்ன செய்வது?' அந்தக் காசு உருண்டு அல்லூரில் ஓடிக்கொண்டு இருந்த தண்ணீரில் கிடந்தது. எனக்கு அதை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. அந்த ஒரு வெள்ளி எனக்கு மிகவும் அவசியம், ஒரு வெள்ளிக்காக அல்லூரில் இருக்கும் காசை எடுப்பது எனக்குச் சங்கடமாக இருந்தது. யாரிடமாவது உதவி கேட்பது என்றாலும் மொழி பிரச்சினை மட்டும் அல்ல அது கௌரவ பிரச்சனையாக தோன்றியது. என்ன செய்யலாம்? ஏதாவது யோசி, யோசி என்று என் மூளை கட்டளையிட்டது. கையில் இருக்கும் பையில் வேறு காசு இருக்கலாம்மென்றுத் தேடினேன். எதுவும் தட்டுப்படவில்லை. வைத்தால் தானே கிடைக்கும். என் நிலைமையைப் பாருங்கள். எங்குச் சென்றாலும் காரில் கூட்டிச்செல்லும் தம்பிகள், இங்கும் காடியில் ஊரைச் சுற்றிக்காட்டும் கணவர், இத்தனை இருந்தும் என்னிடம் இன்று ஒரு வெள்ளி இல்லை. மீண்டும் அமர்ந்தேன். இப்படி ஒரு பத்து சென்ட் கூட  இல்லாமல் ஒரு பேருந்து நிறுத்ததில் நிற்பேன் என்று கற்பனையாகக் கூட நினைத்தது இல்லை. முற்றிலும் நம்பிக்கையற்று, ஏதாவது தெய்வம் உதவினால் மட்டுமே உண்டு என்று நம்பிக்கையும், அவநம்பிக்கையுமாக அமர்ந்து இருந்தேன். அப்ப, அப்ப அல்லூரையும் நோக்கி போகும் பார்வையும் தடுக்க முடியவில்லை. அந்தக் காசு தவறாமல் இருந்திருந்தால் நாம் இன்னேரம் வீடு சென்றிருக்கலாம் என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை. இப்படியே

        மேலும் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது மணி 1.30. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. காலையில் அவசரத்தில் ரொட்டி மட்டுமே சாப்பிட முடிந்தது. இந்த நேரத்தில் எப்போதும் என் கணவருக்கு போன் செய்து சாப்பிட்டாரா? என்று விசாரிப்பேன்' இன்று முடியாது. என் கணவர் என் போனை எதிர்பார்ப்பாரா என்றும் தெரியாது ஆனாலும் நான் கேட்பேன்'. சற்று நிமிர்ந்துப் பார்த்தேன். என்னைத் தவிர அனைவரும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் புதியவர்கள். மேலும் அரை மணி நேரமாகியது. அப்போது வேகமாக ஒரு காடி, பேருந்து நிறுத்ததில் வந்து நின்றது. அப்போது நான் நிமிர்ந்துப் பார்த்தேன். காடியில் இருந்து என் கணவர் இறங்கி கொண்டு இருந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு என் உயிரே திரும்ப வந்தது. வேகமாக எழுந்து யார் இருக்கிறார்கள் என்றுப் பார்க்கவில்லை ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன். அவர் உடனே ' சரி காடியில் ஏறு' என்றுக் கூறிவிட்டு என்னை அவசரமாக காடியில் அமர்த்தி வேகமாகக் காடியை எடுத்து, பக்கத்தில் இருந்த கார் பார்க்கில் நிறுத்தினார். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிது நேரம் கழித்து 'அழாதே' என்றுக் கூறித் தலையைத் தடவித் தண்ணீர் பாட்டிலை என்னிடம் கொடுத்தார். நானும் காலையிலிருந்து பட்ட மன உளச்சல் மட்டுப்பட தண்ணீரை அருந்தினேன். பின்னர் நிமிர்ந்து என்னவரைக் கேள்வியுடன் நோக்கினேன். ' நீ எப்போதும் மதியம் 1.30க்கு போன் செய்துச் சாப்பிடீர்காளா? என்று கேட்பாய், அதனை நான் எப்போதும் எதிர்பார்ப்பேன், இன்று கால் செய்யவில்லை, வீட்டிற்கு அடித்தேன் யாரும் எடுக்கவில்லை. சரி என்று கைப்பேசிக்கு அழைத்தேன், அக்கா சொன்னார்கள் நீ வாலட்டையும் போனையும் அங்கு விட்டுவிட்டாய் என்று, அப்படி என்றால் உன்னிடம் காசும் இல்லை போனும் இல்லை என்பதை உணர்ந்தேன் அதனால் உன்னைத் தேடி பதற்றத்துடன் தான் வந்தேன். உன்னைக் காணும் வரை நான் நானாக இல்லை. வேலையிடத்தில் கூட சொல்லவில்லை. அப்பாடா' என்று பெரும் மூச்சை இழுத்துவிட்டார். அவரின் செய்கையும் பேச்சும், எனக்குள் புதிய கோணத்தைக் காட்டியது......